search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக அறிவிப்பு"

    அரசு நிதி உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆதரவாக தி.மு.க. போராட்டம் நடத்த உள்ளதாக புதுவை தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசின் நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகள் மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகளில் பயிற்றுவிக்கும் நிரந்தர ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு பிரதி மாதம் சம்பளம் வழங்கப்படுவதில்லை. அங்கு 12 ஆண்டு காலம் தற்காலிகமாக பணிபுரியும் ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.

    நிலுவை சம்பளம், பணி நிரந்தரம் கோரி அவர்கள் போராட்டமும் நடத்தி வருகின்றனர். நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை போராட்டத்திற்கு தள்ளிய அரசு அவர்களை அலைகழித்து வருவதை புதுவை மாநில திராவிட முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

    கல்வி உரிமைச்சட்டத்தின் படி அரசு பள்ளியில் பயிற்றுவிக்கும் ஆசியர்களுக்கு என்னென்ன உரிமைகள், சலுகைகள் உள்ளனவோ அவை அத்தனையும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் பொருந்தும். அப்படி இருக்க அரசு நிதி உதவி பெறும் பள்ளியின் 600 நிரந்தர ஆசிரியர்களுக்கு கடந்த 6 மாதமாக சம்பளம் வழங்காமல் இருப்பதுடன் 7-வது ஊதியக்குழு அமல்படுத்தி ஓராண்டாகியும் அவர்களுக்கு வழங்காமல் அரசு அலைகழித்து வருகிறது.

    இதனால் குடும்பச் செலவு, மருத்துவச் செலவு, குழந்தைகளின் கல்வி கட்டணம் ஆகிய அத்தியாவசிய செலவுகளுக்கு அல்லல்படும் நிலைமைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளது வேதனை அளிக்க கூடியதாக உள்ளது.

    இது மட்டுமல்லாமல் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் 244 பேரை பணிநிரந்தரம் செய்ய ஆணை பிறப்பித்தும் அவர்கள் பணிநிரந்தரம் செய்யாமல் அலைகழித்து வருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.

    இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் அரசு செவிசாய்க்க வில்லை. தமிழகத்தில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு எங்கள் கழக ஆட்சியில் தலைவர் கலைஞர் அவர்கள் 100 சதவீதம் நிதியுதவி வழங்கினார். அது போல் புதுவையிலும் 100 சதவீதம் நிதியுதவி வழங்கி அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

    ஆகவே புதுவை அரசு மற்ற வி‌ஷயங்களில் மெத்தனமாக இருப்பது போல் இந்த விவகாரத்தில் இருக்காமல் அரசு பள்ளிகளுக்கு நிகராக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு சலுகைகள் மற்றும் உரிமைகள் வழங்க வேண்டும், நிலுவை சம்பளம் வழங்க முதல்-அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் அந்த ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் முன்னெடுக்கும் போராட்டத்தை தி.மு.க. தலைமையேற்று நடத்தும் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. அறிக்கையில் கூறியுள்ளார்.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டை கண்டித்து புதுவையிலும் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. அறிவித்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை லப்போர்த் வீதியில் உள்ள புதுவை தெற்கு மாநில தி.மு.க. அலுவலகத்தில் அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு புதுவை தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தி.மு.க. வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி. சிவக்குமார் முன்னிலை வகித்தார்.

    இதில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகி அபிஷேகம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ராஜாங்கம், முன்னாள் செயலாளர் பெருமாள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய தமிழக காவல்துறையில் காட்டுமிராண்டித்தனத்தையும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசையும், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசையும் வன்மையாக கண்டிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்தனர். இந்த நிலையில் நாளை தமிழகத்தில் தி.மு.க. சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

    இதையடுத்து புதுவையிலும் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. அறிவித்துள்ளது.

    ×